
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கான வேலைகளில் தற்போது மும்முரம் காட்டி வருகின்றார். சமீபத்தில் கூட மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று பலருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. அதே சமயம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கி நேற்று இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படியான நிலையில் விஜயின் தீவிர தொண்டரான நடிகர் சௌந்தர்ராஜன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, என்ன பொறுத்த வரைக்கும் தளபதி தான் எனக்கு முக்கியம். கட்சியில பொறுப்பு முக்கியமல்ல. பதவி என்பது இன்னைக்கு வரும் நாளைக்கு போகும். ஆனா நான் தளபதியின் உண்மையான தொண்டனாக அவருடன் நின்று கட்சிக்காக உழைக்க தான் விரும்புகிறேன்.
மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறுவது போல தளபதி பக்கமும் நின்று யோசிக்க வேண்டும். மாவட்ட செயலாளர்களுக்கு பதவி வழங்கப்படாதது ஆதங்கமாக இருந்தாலும் தளபதியின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டால் எந்தவித குழப்பமும் இருக்காது. அவர்களைத் தெளிவுபடுத்துவது தான் எங்களுடைய வேலை. தளபதிக்காக கூட நின்று கட்சிக்காக உழைத்து நம்மால் முயன்றதை செய்வோம் என்று சௌந்தரராஜன் பேசியுள்ளார்.