தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரன், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது குறித்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்பி கே.ஆர்.பி. பிரபாகரன் போட்டியிடுகிறார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தும் வீடியோ ஒன்று கசிந்துள்ளது. அதில் அவர் பேசியதாவது,

“கட்சித் தலைமையிடம் இருந்து பணம் வந்துள்ளது. ஒவ்வொரு வாக்கும் நமக்கு மிக முக்கியம். எனவே, நமது கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று உறுதியாகத் தெரிந்தால் அனைவருக்கும் பணத்தைக் கொடுத்துவிடுங்கள். ‘போலீஸ் வந்துவிட்டது, எங்களிடம் இருந்த பணத்தைப் பறித்துவிட்டார்கள்’ என்று காரணங்களைச் சொல்லக் கூடாது. பணத்தைச் சரியாகப் பட்டுவாடா செய்ய வேண்டும் என்கிறார்.

 

அதோடு பணம் கொடுக்கும்போது பாஜகவினரையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் பாஜக ஆதரவு வீடுகளை அடையாளம் காட்டுவார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் வீடு பார்த்துப் பணம் கொடுப்பார்கள், அதேபோல நாமும் விழிப்புடன் இருக்க வேண்டும். காங்கிரஸ் வாக்காளர்களுக்கும் பணம் கொடுங்கள். வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் பணத்தை விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் பேசியுள்ளார்.

“வெற்றி வாய்ப்பு என்பது வெறும் 50 வாக்குகளில் கூட மாறலாம் என பொதுச்செயலாளர் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, ஒரு வாக்கு தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்,” என்றும் அவர் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஆளும் கட்சியான திமுகவின் மனோஜ் பாண்டியனை வீழ்த்த அதிமுக தீவிர வியூகம் வகுத்து வரும் நிலையில், வேட்பாளரின் இந்த ‘பணப்பட்டுவாடா’ பேச்சு தேர்தல் அதிகாரிகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.