தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்திய மக்கள் நீதி மய்யம், இறுதியில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளது. தி.மு.க வழங்கிய 2 தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதால், தனித்துவத்தை இழக்க விரும்பாத கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தி.மு.க கூட்டணிக்கு தனது முழு ஆதரவை அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 50,000 ரூபாய் செலுத்தி விருப்ப மனு அளித்த 60-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம் என அக்கட்சி தற்போது அறிவித்துள்ளது. ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை தலைமை அலுவலகத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “வாங்கிய பணத்தை கட்சி நிதியாக மாற்றிக்கொண்டார் கமல்” என பரவிய வதந்திகளுக்கு இந்த அறிவிப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
