
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மாதம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் அதாவது ஓய்வு பெற்றவர்கள் தங்களது சேமிப்பு மற்றும் முதலீட்டின் மீதான வருமானத்தை சார்ந்திருக்க வேண்டி உள்ளது. ஓய்வூதியம் கிடைக்காத மக்கள் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
அத்தகைய நபர்களுக்கு பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள் மீதான நீண்ட காலம் மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு வரம்பை அரசு அதிகரிக்கலாம். தற்போது பரஸ்பர நிதிகளின் பங்குகள் மற்றும் ஈகிவிட்டி திட்டங்களில் நீண்ட காலம் மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு பெறுவதற்கான வரம்பு ஒரு லட்சம் ரூபாயாக உள்ளது. இந்த வரம்பை குறைந்தபட்சம் 2 லட்சம் ஆக அரசு உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அதனைப் போலவே ஓய்வூதியம் முறையாக பெறாத முதியோர்களுக்கு வீட்டு வாடகைக்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும். அதேசமயம் கடந்த 10 ஆண்டுகளாக ஹெல்த் பாலிசி பிரீமியத்தின் மீதான விலக்கு வரம்பு அதிகரிக்கப்படவில்லை. தற்போது மூத்த குடிமக்களுக்கான ஹெல்த் பாலிசி பிரீமியத்தில் கழிப்பதற்கான வரம்பு 50,000 ரூபாயாக உள்ள நிலையில் இதனை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.