
திருச்சி மாவட்டம் துறையூர், ஜம்புநாதபுரம், பேட்டை மற்றும் உப்பிலியபுரம் போன்ற பகுதியில் உள்ள கோவில்களில் சில நாட்களாக சுவாமிகளுக்கு அணியக்கூடிய நகைகள் மற்றும் உண்டியல்களில் திருட்டு நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கண்ணனூர் பாளையம் அருகில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரித்த போது, அவர்கள் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் பாரதி(22), திருச்சியை சேர்ந்த சரவணன்(44) என கூறினர்.
மேலும் இருவரும் சேர்ந்து பல்வேறு கோவிலில் உள்ள உண்டியல் மற்றும் சாமி நகைகளை கொள்ளை அடித்தவர்கள் என்பது தெரிந்தது. இதனால் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் தமிழ் பாரதி ஏழாம் வகுப்பு வரையும், சரவணன் எட்டாம் வகுப்பு வரையும் மட்டுமே படித்துள்ளனர் எனவும், இருவருக்கும் படிப்பறிவு இல்லை என்றாலும் ஆண்ட்ராய்டு மொபைல் கையாளுவதில் கைத்தேர்ந்தவர்கள்.
அதனால் கூகுள் மேப் உதவியுடன் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று எங்கெங்கு கோவில்கள் உள்ளது என்பதை கண்டறிந்து காட்டு கோவில்கள் இருக்கும் இடத்தில் கொள்ளையடித்து வந்ததும் தெரிந்தது.