தென்காசி மாவட்டத்தில் உள்ள சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் முத்துமாரி. துணை தலைவராக பட்டுராஜ் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெறாமல் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் பிரச்சனை இருப்பதாக கூறி செங்கோட்டை- இல்லத்தூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து தேவையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து புகார்கள் அளித்தனர்.

அதன் அடிப்படையில் சீவநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக முத்துமாரி, பட்டுராஜ் ஆகியோரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் பறித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செங்கோட்டை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.