தெலுங்கானா மாநிலத்தில் பச்சிளம் குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த ஒரு பெரும் கும்பலை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு குழந்தை சுமார் 15 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சுமார் 15 குழந்தைகள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டிருப்பதை விசாரணையில் கண்டுபிடித்துள்ள போலீசார், இது தொடர்பாக ஒரு மருத்துவர் உட்படப் பலரைத் தடுத்து வைத்துள்ளனர்.
ஏழைப் பெற்றோர்களைக் குறிவைத்து, ஆசை வார்த்தைகளைக் கூறி குழந்தைகளை வாங்குவதும், பின்னர் குழந்தையில்லாத தம்பதியினருக்குப் பெரும் தொகைக்கு விற்பனை செய்வதையுமே இந்தக் கும்பல் தொழிலாகக் கொண்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தைகள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பிடிபட்ட கும்பலிடம் இருந்து சில குழந்தைகள் மீட்கப்பட்டு, தற்போது அவர்கள் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதத் தத்தெடுப்புகளைத் தவிர்க்கவும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்தச் சங்கிலித் தொடர் பின்னால் இன்னும் பெரிய நெட்வொர்க் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
