கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிக்கஹோசஹலியைச் சேர்ந்த வெங்கடேஷ் (76), ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் மந்திராலயம் ராகவேந்திர சாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக தனது குடும்பத்துடன் நேற்று பயணம் மேற்கொண்டார். அவருடன் அவரது மகள் மீனாட்சி (32), மருமகன் சதீஷ் (34) மற்றும் பேரன்கள் பனீத் (5), ரித்விக் (4) ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில், கர்னூல் மாவட்டம் எம்மிகனூர் அருகே கோட்டைகள் பகுதியில் அவர்கள் பயணித்த கார், எதிரே வந்த வேகமான மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதியது. இந்த பெருவிபத்தில் வெங்கடேஷ், மீனாட்சி, சதீஷ் மற்றும் சிறுவர் பனீத், ரித்விக் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆதோனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சேத்தன் மற்றும் பயணி கங்கம்மா எனும் பெண் கடுமையாகக் காயமடைந்தனர். அவர்கள் ஆதோனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்துக்கு காரணமானதாக கூறப்படும் எதிரே வந்த கார், மோதிய பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தகவல். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ; மேலும் சாலை விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.