கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா, புராடுகுண்டே கிராமத்தைச் சேர்ந்த அஞ்சனப்பாவின் மகள் சாரதா (18) சமீபத்தில் ஏற்பட்ட சோகச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அஞ்சனப்பா சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி மதுஸ்ரீ, பிள்ளைகளுடன் சிக்பள்ளாப்பூர் அருகிலுள்ள கனிவே நாராயணபுரா கிராமத்திற்கு குடியேறி வசித்து வந்தார்.
இந்நிலையில், சாரதா நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குறையாததால், அவள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், அவள் அடிக்கடி கத்துதல், கோபப்படுதல் போன்ற செயல்களை வெளிப்படுத்தியதால், மதுஸ்ரீ பல கோவில்களுக்கும் அழைத்து சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது சாரதா தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இளம் பெண்ணின் தற்கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
