நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தமிழகத்திலும் நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து சொல்லவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இரவு 7 மணி வரை நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து கூறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் சொல்லவில்லை. சிறுபான்மையினரை குஷிப்படுத்தும் அதே பழைய தந்திரம். விஜயும் திமுகவினரை காப்பியடிக்கும் அளவுக்கு தாழ்ந்து போய்விட்டார் என்று கூறியுள்ளார். மக்கள் சிந்திக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பல காலமாக திமுகவினர் இந்துக்கள் பண்டிகைக்கும் மட்டும் வாழ்த்து சொல்வதில்லை என குற்றம் சாட்டி வரும் பாஜக தற்போது நடிகர் விஜய் மீதும் அதே குற்றசாட்டினை முன் வைத்து பஞ்சாயத்தினை தொடங்கியுள்ளது. வினோஜ் செல்வம் போட்ட எக்ஸ் பதிவுக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு வருகிறார்கள்.