மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்தினை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஷால் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மலையாள சினிமாவை போன்று தமிழிலும் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதோடு பாலியல் ரீதியாக யாராவது அணுகினால் அவர்களை அந்த இடத்திலேயே செருப்பால் அடிக்க வேண்டும் என கூறினார். இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக தற்போது தனியார் ஊடகம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஷால் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, மலேசியாவில் ஒரு முறை திரைப்படம் சார்ந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சியில் நடிகை அமலா பால் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியின் மேனேஜர் இரவு சாப்பாடுக்கு ரூமுக்கு வந்து விடு என்று மறைமுகமாக பாலியல் உறவுக்காக அழைத்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அமலாபால் அந்த இடத்திலேயே மேனேஜரை அடித்து வெளுத்து விட்டார். அதன் பிறகு உடனடியாக அமலாபால் எனக்கு தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களை கூறினார். நானும் கார்த்தியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களை கூறினேன்.

மேனேஜரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நடவடிக்கை எடுத்தோம். அப்படியான உடனடியான நடவடிக்கைகள் தான் இங்கு தேவைப்படுகிறது. எனவே பெண்கள் உங்களை யாராவது தவறான நோக்கத்தில் அணுகினால் உடனடியாக அவர்களை செருப்பை கழட்டி அடியுங்கள். புதிதாக திரைத்துறைக்கு வரும் இளம் பெண்களுக்கும் நான் இதைத்தான் கூறுகிறேன். மேலும் உங்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனைகள் வந்தாலும் உடனடியாக முதலில் என்னிடம் வந்து கூறுங்கள். நான் உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார்.