சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை நோக்கி கடந்த 6-ம் தேதி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருநெல்வேலி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டு சென்றதாக கூறினர். இது தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து பாஜக கட்சியின் மாநில தொழில்துறை துணை தலைவர் கோவர்த்தனம் என்பவரது உணவகத்தில்  அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது ரூ. 1.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவரிடம் விசாரணை நடத்துவதற்காக தாம்பரம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் அவருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அவருடைய மகன் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நயினார் நாகேந்திரன் தனக்கும் அந்த பணத்திற்கும் சம்பந்தமில்லை என ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.