
திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான ஜாகீர் உசேன் என்பவர் மசூதியில் தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது கடந்த 18ஆம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அக்பர் ஷா, முகமது தவ்பிக்,மற்றும் அவருடைய சகோதரர் கார்த்திக் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவரை தணிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அதன்பிறகு கார்த்திக் மற்றும் அக்பர் ஷா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்தது.
அதாவது அவர்களுடைய உறவினரான ஒரு 16 வயது சிறுவன் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்துள்ளான் என்பது தெரிய வந்த நிலையில் அந்த சிறுவனை நேற்று முன்தினம் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த சிறுவன் 11ஆம் வகுப்பு படித்து வந்தது தெரிய வந்தது. இந்த சிறுவன் தான் சம்பவ நாளில் ஜாகீர் உசேன் தொழுகை முடிந்து வெளியே வந்ததை கொலையாளிகளுக்கு செல்போன் மூலமாக தகவல் கொடுத்துள்ளார். இந்த சிறுவனை நேற்று காவல்துறையினர் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் கார்த்திக் மனைவி நுர்நிஷா என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.