தமிழ்நாட்டில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்குஇன்னும்  9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தயாரிப்புகளை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

தற்போது, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இணைந்ததன் பின்னணியில், தென் மாவட்டங்களில் பாஜகவுக்கு புதிய செல்வாக்கு உருவாகி வருகிறது. மதுரை, ராமநாதபுரம், தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக, இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தொகுதி வாரியான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்பின், பாமக தலைவர் அன்புமணியும், வடமாவட்டங்களை  மையமாகக் கொண்டு தமது விரிவான தேர்தல் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், செப்டம்பர் மாதத்தில், தளபதி விஜயின் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தொகுதி வாரியான பயணத்தைத் திட்டமிட்டுள்ளது.

இவற்றையடுத்து, ஓ.பன்னீர்செல்வமும் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்கிறார் என அறிவித்துள்ளதும், அவரது ஆதரவாளர்களிடையே குழப்பத்தை உருவாக்கியுள்ளது. ஏனெனில், ஓபிஎஸ் ஆதரிக்கும் பாஜக தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, அவர் யாருக்காக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்பதிலான தெளிவின்மையும், அவரது பயணத்தின் நோக்கம் என்ன என்பதிலான கேள்விகளும் எழுந்துள்ளன. இதனிடையே, ஓபிஎஸ் தன் அணியுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அவர் புதிய அரசியல் முடிவை எடுக்கவிருக்கிறாரா? என்ற எதிர்பார்ப்பும் வலுப்பெற்று வருகிறது.