நீதித்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடத்தை நெறிமுறைகள் தொடர்பான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டு உள்ளார். அந்த வகையில், நீதிமன்ற அதிகாரிகள் வருகையின்போது அவர்களை வரவேற்பதற்காக சாலை ஓரங்களில் நீதித்துறை அதிகாரிகள் காத்திருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு நீதிமன்ற நீதிபதிகள் பணி நிமித்தமாக வெளியூர்களுக்கு போகும்போது அவர்களின் வாகனம் செல்வதற்கு வழிக்காட்ட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கும் இடத்திற்கு வரும் வகையில் எவ்வித இடையூறும் இன்றி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு நீதிபதிகள் எந்த காரணம் கொண்டும் பணி நேரத்தில் நீதிமன்றத்தை விட்டு வெளியேறக்கூடாது. நீதிமன்றத்திற்கு வெளியில் நீதிபதிகள் கருப்பு கோர்ட் மற்றும் கருப்பு டை அணிவதை தவிர்க்கவும்.

நீதிமன்ற அதிகாரிகள் பதவி உயர்வு, இடமாற்றம் (அ) ஏதேனும் சலுகைகள் வழங்ககோரி உயர் பதவியில் இருக்கும் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சால்வை போர்த்தி, பூங்கொத்து, மாலை, பரிசுகள் போன்றவற்றை வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்புகள் அனைத்தையும் நீதிமன்ற நீதிபதிகள் கடைபிடிக்குமாறு உயர்நீதிமன்ற பதிவாளர் எம்.ஜோதி ராமன் உத்தரவிட்டுள்ளார்.