நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நிலையில் கடந்த 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ஏற்பட்ட நிலையில் சுமார் ‌ரூ.30 லட்சம் வரையில் ஒரு வினாத்தாள் விற்பனையானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவில் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் அரியானாவில் மட்டும் 6 மாணவர்கள் முதலிடம் பிடித்திருந்தனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 1563 பேரின் கருணை மனுக்களை ரத்து செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இன்று நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்று சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தீவிர விசாரணை நடைபெற்று  வருகிறது.