சென்னையை அடுத்த அரும்பாக்கத்தில் கனமழையால் தேங்கிய மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல், மாணவர் ரேயன் தவறி மின்சாரம் தாக்கிய நிலையில் தவித்தார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த கண்ணன் என்ற 23 வயது இளைஞர், யாரும் உதவ முன்வராத சூழ்நிலையில் தனது உயிரை பணயம் வைத்து ரேயனின் உயிரை காப்பாற்றினார். தன்னலமற்ற இந்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை குவித்துள்ளது.

இதுகுறித்து கண்ணன் கூறியதாவது, “மழையால் சாலைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருந்தன. என் பைக்கில் கலெக்‌ஷனுக்காக சென்றபோது, ஒரு சிறுவன் திடீரென தண்ணீரில் விழுந்தான். முதலில் வழுக்கி விழுந்தான் என்று நினைத்தேன்.

அருகில் சென்று பார்த்தபோது அவன் உதறிக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவனை மின்சாரம் தாக்கியிருக்கும் என புரிந்தது,” என கூறினார். பிறகு யாரும் உதவ வராததால், துணிச்சலுடன் பையனின் கையை பிடித்து இழுத்து, உயிரைக் காப்பாற்றியதாக தெரிவித்தார்.

பின்னர், ரேயனுக்கு முதலுதவி செய்து, மருத்துவமனையில் அனுமதித்த கண்ணனின் இந்த செயல் மக்களிடையே பெரும் வாழ்த்துகளைப் பெற்றுள்ளது. “அந்த பையன் உயிருடன் இருந்தது தான் எனக்கு பெரிய மகிழ்ச்சி. யாரும் பார்க்காமல் இருந்தால், அந்த பையன் உயிரிழந்திருக்க கூடும்.

அனைவரும் இந்த மாதிரியான அவசர நேரங்களில் தயக்கம் இல்லாமல் உதவ வேண்டும்” என கண்ணன் கூறியுள்ளார். சமூகத்தில் நல்ல மனம் கொண்ட இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.