ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் எழுப்பிய விமர்சனங்களுக்கு இஸ்ரேல் மிகக் கடுமையான பதிலடியை கொடுத்துள்ளது. மற்ற நாடுகளுக்கு அறிவுரை கூறுவதை விடுத்து, பாகிஸ்தான் முதலில் தனது நாட்டில் வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் “பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கும் ஒரு நாடு, அமைதியைப் பற்றி பேசுவது வேடிக்கையானது” என்று குறிப்பிட்ட இஸ்ரேல், பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலைக் குற்றம் சாட்டிய பாகிஸ்தானுக்கு, அதன் சொந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் அநீதிகளைச் சுட்டிக்காட்டி இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது.

மேலும் பயங்கரவாத அமைப்புகளுக்குத் துணை நின்றுகொண்டு, சர்வதேச மேடைகளில் மனிதாபிமானம் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இஸ்ரேல் பிரதிநிதி ஆவேசமாகத் தெரிவித்தார். இந்த நேரடி மோதல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பாகிஸ்தானின் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.