குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதி கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாவட்ட நிர்வாகங்கள் மீட்பு பணிகளை முழுவீச்சில் துரிதப்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் 9 அமைச்சர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.. மேலும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது.. இந்த 4 மாவட்ட மக்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “நெல்லை மாவட்டத்தில் அதிக கன மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, அங்கு நடைபெறுகிற மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அரசு தரப்பில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அப்பணிகளை ஆய்வு செய்வதற்காக நெல்லை வருகை தந்துள்ளோம். நெல்லை பாளையங்கோட்டையில் வெள்ளம் ஏற்பட்ட சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள பெல் உயர் நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி, இப்பேரிடர் நேரத்தில் துணை நிற்போம் என்று எடுத்துக்கூறினோம்” என பதிவிட்டுள்ளார்..