பசங்க படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமான புதுக்கோட்டை விராச்சிலையை சேர்ந்த பாண்டிராஜ், பிறகு பல படங்களை இயக்கி பிரபலமடைந்தார். இப்போது சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரக்கூடிய பாண்டிராஜ், கடந்த 20 தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த குமார் என்பவர் வெள்ளனூர் கிராமத்திலுள்ள 1 ஏக்கர் 43 சென்ட் பரப்பளவு நிலத்தில், 27 சென்ட் நிலத்தை தனக்கு கடந்த 2013-ம் வருடம் விற்பனை செய்வதாக முதலில் 40 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றார்.

இதையடுத்து அதே பட்டா எண்ணுடைய(481) நிலத்தின் மற்றொரு பகுதியிலிருந்து 54 சென்ட் நிலத்தை தன்னிடம் விற்பனை செய்வதாக கூறினார். அதற்கென கடந்த 2014-ம் வருடம் 12 லட்ச ரூபாய் முன் தொகை கொடுத்தேன். எனினும் அந்த 2 நிலங்களையும் என் பெயருக்கு இன்னும் அவர் பதிவுசெய்யவில்லை என பாண்டிராஜ் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று 5 தவணைகளாக என்னிடம் நிலம் விற்பனை செய்வதாக குமார் மொத்தம் 1 கோடியே 89 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு நிலம் ஏதும் தனக்கு பத்திர பதிவு செய்யாமல் மோசடி செய்து விட்டார் என பாண்டிராஜ் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்து புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் குமாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். அதன்படி அவரை புதுக்கோட்டை சிறையில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.