
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஞானகிராம்கூடா பகுதியில் ஒரு கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் பின்புறம் இருக்கும் கல்வாரியில் அந்த பகுதியில் வசிக்கும் வாலிபர்கள் காற்றாடி விடுவதற்காக சென்றனர். அப்போது ஒரு பகுதியில் துர்நாற்றம் வீசியதால் வாலிபர்கள் அங்கு சென்றனர். அப்போது முகம் சிதைந்து பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் ஒரு வாலிபர் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்து சற்று தொலைவில் நிர்வாணமான நிலையில் முகம் சிதைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் உடலும் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சடலமாக மீட்கப்பட்டவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அங்கீத் சாகித். அவர் தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த இளம்பெண் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பிந்து. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. அவர்களது செல்போன்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். காதலர்கள் தனிமையில் இருந்த போது குடிபோதையில் வந்த கும்பல் அந்த வாலிபரை தாக்கி இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.