நாக்பூர் மாநகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த மஹால் பகுதியில், வெறித்தனமாகத் தாக்கிய எருமை மாடு முட்டித் தள்ளியதில் 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இல்லம் அமைந்துள்ள மஹால் பகுதியில், திங்கள்கிழமை காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்பகுதியில் சுற்றியலைந்த நாய் ஒன்று, அங்கிருந்த எருமை மாடு ஒன்றை கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆக்ரோஷமடைந்த எருமை, கட்டுக்கடங்காமல் சாலைகளில் ஓடி பொதுமக்களைத் தாக்கியது.

திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உயிர் பிழைக்க வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். சுமார் 10-க்கும் மேற்பட்டோர் எருமையின் தாக்குதலில் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எருமை மாட்டைப் பிடித்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதற்கிடையில்  80 வயது முதியவர் லக்ஷ்மன் கும்பாரே, பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு  அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தார். அவரது உடல் மீண்டும் அரசு  மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடைபெறவுள்ளது.

நாக்பூர் மாநகரப் பகுதிகளில் திரியும் கால்நடைகளால் விபத்துகளும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலையெங்கும் திரியும் கால்நடைகளை அகற்றத் தவறிய மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.