பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூலம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பெயர்போன ‘வாட்டர் மெலன்’ திவாகர், தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது தன்னைத்தானே “நடிப்பு அரக்கன்” என்று அழைத்துக்கொண்டது முதல், சாதி ரீதியான விமர்சனங்கள் வரை திவாகரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் சூழ்ந்தே இருந்தன. சக போட்டியாளர்களுடனான மோதல் மற்றும் அவரது விசித்திரமான பேச்சுக்கள் நெட்டிசன்களுக்குப் பெரிய அளவில் ‘மீம்’ தீனியாக அமைந்தன.
முன்னதாக ஒரு பேட்டியில், “விஜய் அரசியலுக்குச் சென்றுவிட்டார், அஜித் கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார்; இனி தமிழ் சினிமாவை நான் தான் காப்பாற்ற வேண்டும்” என்று திவாகர் கூறியது பெரும் கேலிக்கு உள்ளானது. இந்நிலையில், தனக்குத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திவாகர் கூறியதாவது: “பல அவமானங்கள் மற்றும் கேலிகளைக் கடந்து இன்று நான் கதாநாயகனாக உயர்ந்துள்ளேன். வெள்ளித்திரையில் ஒரு ‘நடிப்பு அரக்கனை’ ரசிகர்கள் விரைவில் காண்பார்கள். எனக்கு வரப்போகும் மனைவி நடிகைகள் திரிஷா அல்லது சமந்தாவைப் போல இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்.
திவாகரின் இந்தப் பேச்சைக் கேட்ட நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் மீம்ஸ்களைக் குவித்து வருகின்றனர். “திரிஷா, சமந்தா ரேஞ்சுக்கு ஆசைப்படுவதற்கு முன்னால், ‘நடிப்பு அரக்கன்’ பட்டத்திற்கு ஒரு காட்சியிலாவது நடித்துக் காட்டுங்கள்” எனச் சிலர் விமர்சித்து வருகின்றனர். இன்னும் சிலரோ, “அவர் சொன்னது போலவே சினிமாவைத் திருத்த வந்துவிட்டாரோ?” என நையாண்டியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் எது எப்படியோ, பிக்பாஸ் வைரல் முகமாக அறியப்பட்ட திவாகர், வெள்ளித்திரையில் உண்மையிலேயே ஒரு ‘நடிப்பு அரக்கனாக’ ஜொலிப்பாரா அல்லது மீம் மெட்டீரியலாகவே தங்கிவிடுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
