உத்தரப்பிரதேச மாநிலத்தின் எட்டாவா மாவட்டத்தில், 33 வயதான பொறியாளர் மோகித் யாதவ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன் அவர் பதிவிட்ட வீடியோவில், மனைவி பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர், தன்மேல் பொய்யான வழக்குகள் பதியவுள்ளதாக மிரட்டியதாகவும், வீடு மற்றும் சொத்துகளை பெயர் மாற்றச் சொல்லி அழுத்தம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். “நான் இறந்த பிறகும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் என் அஸ்தியை சாக்கடையில் வீசுங்கள்” என உருக்கமாக கூறியுள்ளார்.

 

கடந்த மார்ச் 21ஆம் தேதி, மோகித், எட்டாவா ரயில்நிலையத்திற்கு அருகிலுள்ள ஜாலி ஹோட்டலில் தங்கியிருந்தார். அடுத்த நாள் ஹோட்டல் அறையில் இருந்து வெளியே வராததால், ஊழியர்கள் அறையை திறந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கும் நிலையில் இருந்ததை கண்டனர். போலீசாரின் விசாரணையில், மோகித் ஒரு சிமென்ட் நிறுவனத்தில் ஃபீல்ட் எஞ்சினியராக பணியாற்றி வந்தவர் எனவும், கடந்த 2023-ஆம் ஆண்டு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் எனவும் தெரியவந்தது. வீடியோவில், பிரியா கர்ப்பமாக இருந்தபோதும், அவரது தாயின் அழுத்தத்தால் கருக்கலைப்பு செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம், பெண்கள் தரப்பிலிருந்து தவறான புகார்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு சட்டமன்றம் தரும் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. “ஆண்களுக்கு எவ்வித சட்ட பாதுகாப்பும் இல்லை, எனவே தான் இந்த முடிவை எடுத்தேன்” என அவர் வீடியோவில் கூறியுள்ளார். இந்த சம்பவம், கடந்த ஆண்டு பெங்களூருவில் அதுல் சுபாஷ் என்ற மென்பொறியாளர் தற்கொலை செய்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. தற்போது, ஆண்களின் உரிமையை வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், இது போன்ற நிகழ்வுகள் ஆண்கள் பாதுகாப்பு சட்டத்துக்கான தேவை அதிகரிக்கிறது என்பதை வலியுறுத்துகின்றனர்.