ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் ஆரேப்பாளையம் பகுதியில் நேற்று அதிமுக கட்சியின் சார்பில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகி ஒருவர் பேசியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது செங்கோட்டையனுக்கு முதல்வர் பதவி தேடி வந்தது என்றும் ஆனால் அவர் அந்த பதவியை மறுத்துவிட்டு ஒரு சிறிய மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பதவியை போதும் என்று கூறி இங்கு அமர்ந்திருப்பதாக கூறினார். அதாவது மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜப்பார் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து  உரையாற்றும்போது, மக்களுக்காக நல்லது செய்யக்கூடிய அதிமுக கட்சி தற்போது பாஜகவுடன் பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்துள்ளது.

கடந்த தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜக காரணம் கிடையாது அதற்கு நாம் தான் காரணம் என்பதை உணர வேண்டும். நான் ஒரு இஸ்லாமியனாக இருந்த போதிலும் இந்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிடம் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறினேன். ஏனெனில் முஸ்லிம்கள் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள். நான் கோவையில் முஸ்லிம் ஜமாத் தலைவராக இருந்தவன்.

முஸ்லிம் மக்களுக்காக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் நிறைய நல்ல காரியங்கள் செய்த போதிலும் அவர்கள் அதிமுகவுக்கு ஓட்டு போடவில்லை. கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட நம்முடன் இருந்த முஸ்லிம் கட்சிகள் திமுகவுக்கு தான் ஓட்டு போட்டது. இப்போது பாஜக உடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவுக்கு மிகப்பெரிய பலம் வந்துவிட்டது. மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.