ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பனியானா பகுதியில் கோமாராம் என்பவர் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அவர் வழக்கம்போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையில் இனிப்புகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தது. மேலும் கடை கல்லாவில் பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் திருட்டு  நடந்துள்ளது என்பதை தெரிந்து கொண்டார். இதனையடுத்து அங்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. கடையில் கொள்ளை அடித்த திருடன் உரிமையாளருக்கு இரண்டு பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளான்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஹலோ சார் நான் நல்ல மனசு கொண்டவன். நான் உங்கள் கடைக்கு திருடுவதற்காக வரவில்லை. என்னுடைய ஆசையை நிறைவேற்றதான் வந்தேன். நான் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது. அதனால் எனக்கு பசித்தது உங்கள் கடைக்கு சாப்பிட வந்தேன். பணம் திருட வரவில்லை. நீங்கள் ஏழை என்பதை நான் அறிகின்றேன். உங்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். என்னுடைய காலில் அடிபட்டிருப்பதால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. அதன் காரணமாக உங்கள் கல்லாவில் இருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டேன். மேலும் நான் உங்கள் கடைகளில் அதிகமாக எதுவும் சாப்பிடவில்லை.

கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் போலீசாரிடம் புகார் தெரிவிக்க வேண்டாம். ஏனென்றால் நான் உங்கள் விருந்தாளி என எழுதி இருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். ஆனால் கடையின் உரிமையாளர் இந்த கடிதத்தை படித்து பார்த்துவிட்டு நான் போலீசாரிடம் புகார் அளிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து உரிமையாளர் புகார் அளிக்காவிட்டாலும் அந்த திருடனை தேடி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.