
மக்களை காப்போம் , தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, கோவை தேக்கம்பட்டி கூட்டத்தில் அவர் பேசுகையில், விவசாயம் தான் தனது வாழ்நாள் தொழிலாக இருக்கிறது என்றும், இன்றும் அவர் விவசாயத்தை தொடர்ச்சியாக செய்து வருவதாகவும் உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.
“நானும் ஒரு விவசாயி. விவசாயம்தான் என் பிரதான தொழில். வேறு எந்த தொழிலும் இல்ல. அதனாலதான் யாராலும் எனக்கு ஒன்றும் செய்ய முடியல,” என உணர்ச்சிகரமாக பேசியார்.
“ஒரு தாய் எப்படி குழந்தையை பிறந்த நாளில் இருந்து பாதுகாப்போமோ, அதே போல ஒரு விவசாயியும் தனது பயிர்களை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார். மழையோ வெயிலோ என்றும் பாராம, இரவும் பகலும் உழைக்கும் அவர்களுடைய துன்பங்களை உணர்ந்திருக்கிறேன்,” என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லி, விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை அரசியல்வாதிகளும், மக்கள் அனைவரும் உணரவேண்டும் என்றார்.

தனது ஆட்சி காலத்தில் விவசாயத்திற்கு நீரை முக்கியமாகக் கொண்ட பல திட்டங்களை செயல்படுத்தியதாகவும், குறிப்பாக சொட்டுநீர் பாசனத்துக்காக இந்தியாவில் மத்திய அரசிடமிருந்து அதிக நிதி பெற்றது தமிழகமே என பெருமையுடன் கூறினார். “ஒரு ஏக்கர் நிலத்திற்கு முழுமையான மானியம். அதற்கு மேல் இருந்த நிலத்துக்கு 75 சதவீத மானியம் வழங்கப்பட்டது. இதனால் குறைவான தண்ணீரில் கூட பயிர்ச்செய்கை சாத்தியமானது” என்று தெரிவித்தார்.
இந்த தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களுடைய நிலைமைகளை கேட்டறிந்த பின்பு உரையாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயம் என்பது நாட்டின் முதன்மைத் துறை என்பதையும், அதை பாதுகாப்பதற்கும் வளர்ச்சியடைய செய்ய வேண்டிய தலையீடுகளையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
“ஒரு சுட்டு தண்ணீர் இருந்தால் கூட விவசாயத்திற்கே பயன்படுத்தவேண்டும் என்பதே என் நிலைப்பாடு” என வலியுறுத்திய அவர், விவசாயிகளுக்கு நன்மை தரும் அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்திலும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.