பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சில ஊடகக் குழுக்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள், இந்தியாவின் உயர் ராணுவ அதிகாரிகளை குறிவைத்து திட்டமிட்ட தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என்பது பாதுகாப்புத் துறை வட்டாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ். ராணா, லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி. சுசீந்திர குமார் மற்றும் ஏர் மார்ஷல் எஸ்.பி. தர்கர் ஆகியோர் “பணிநீக்கம் செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்” எனும் பொய்யான செய்திகளை இந்த ஊடகங்கள் பரப்பி வருகின்றன. உண்மையில், லெப்டினன்ட் ஜெனரல் ராணா அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளையின் தலைமைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் சுசீந்திர குமார் தனது நீண்ட சேவைக்குப் பிறகு கௌரவ ஓய்வு பெற்றுள்ளார். அதேபோல், ஏர் மார்ஷல் தர்கரும் அவரது பதவிக்காலத்தை முடித்து மரியாதையுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

“>

 

இந்த தவறான தகவல் பிரச்சாரம், பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடைய சமூக ஊடகக் கணக்குகள் மூலம் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா அளித்த விரைந்த மற்றும் வலுவான பதிலடி, ராணுவத்தின் செயல்பாட்டுத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தியதுடன், நாட்டின் பாதுகாப்பு துறையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர் தலைமையகம், பொது மக்களுக்கு தவறான தகவல்கள் பரவாமல் இருக்க உடனடி விளக்கங்களை வழங்கி வருகின்றது.