உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில்ஞ கடந்த மார்ச் 3ஆம் தேதி நடந்த சௌரப் ராஜ்புத் கொலை வழக்கில், போலீசார் இன்று (மே 12) 1000 பக்கங்களை கொண்ட  குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் சௌரப்பின் மனைவி முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹில் ஆகியோர் தொடர்புடையவர்களாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சௌரப்பின் மரணம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதற்கான விசாரணையில், முஸ்கான் மற்றும் சாஹில் இடையே இருந்த கள்ளக்காதலே கொலையின் பின்னணி என போலீசார் உறுதி செய்துள்ளனர். இது சூனியத்தால் செய்யப்பட்ட கொலை அல்ல என்பது குற்றப்பத்திரிகையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, காவல் நிலைய ஆய்வாளர் ராமகாந்த் திவாரி கூடுதல் நீதிபதி அனுஜ் தாக்கூர் முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். பிரம்மபுரி காவல் நிலையம் வழக்கை விசாரித்து வந்த நிலையில், காவல் கண்காணிப்பாளர் ஆயுஷ் விக்ரம் சிங் கூறுகையில், 36 முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள், மொபைல் CDR, சிசிடிவி பதிவுகள் மற்றும் SFL ஆய்வுத் தகவல்களுடன் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சாஹிலும் முஸ்கானும் ஏற்கனவே எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்து வந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு சௌரப் வெளிநாடு சென்றபோது அவர்கள் மீண்டும் தொடர்பு கொண்டு உறவை வளர்த்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையின்படி, முஸ்கான் சௌரப்பின் உணவில் தூக்க மாத்திரை கலந்து, அவரை மயக்கத்தில் ஆழ்த்தியபின், சாஹில் மூன்று முறை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதன்பிறகு இருவரும் சேர்ந்து சௌரப்பின் உடலை 15 துண்டுகளாக வெட்டி, ப்ளாஸ்டிக் டிரம்மில் சிமெண்டால் மூடி மறைத்தனர். டிரம்மை விற்பனை செய்த கடை, கத்தி, சிமெண்ட் வாங்கிய கடை, ஹோட்டல் பதிவு, டாக்ஸி ஓட்டுநர் மற்றும் முஸ்கானின் வீட்டு உரிமையாளர் உள்ளிட்டோரிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் இவர்களின் தண்டனையை உறுதி செய்ய நீதிமன்றத்தில் காவல்துறை வலுவாக முயற்சி மேற்கொண்டு வருகின்றது.