நாட்டில் நடந்த ஒரு மிகப்பெரிய மருத்துவக் கல்வி ஊழலை தற்போது சிபிஐ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த மிகப்பெரிய ஊழலில் பிரபல சாமியார் ரவிசங்கர் மகராஜ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தான் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழலில் முன்னாள் கல்வி தலைவர் டி.பி சிங், அரசு சுகாதாரத் துறை தலைவர் உட்பட 34 அதிகாரமிக்க நபர்கள் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக நோயாளிகளை பொய் கணக்கு காண்பித்து பல்வேறு மோசடிகள் மூலம் அனுமதி வழங்கியுள்ளனர். இதற்காக பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுள்ளனர். குறிப்பாக சாமியார் ரவிசங்கருக்கு சொந்தமான அறக்கட்டளையின் மூலம் செயல்படும் கல்வி நிறுவனத்திற்கு சாதகமான அறிக்கை வழங்க  55 லட்சம் வரையில் மூன்று மருத்துவர்கள் லஞ்சம் வாங்கிய நிலையில் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் தான் இந்த மிகப்பெரிய மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த மோசடியின் மைய இடம் மத்திய சுகாதார அமைச்சகத்தில் இருந்ததாகவும் அங்கு வேலை பார்க்கும் 8 அதிகாரிகள் கோப்புகளை ரகசியமாக படம் பிடித்து ஆய்வு தேதிகள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களை முன்கூட்டியே கல்லூரி நிறுவனங்களுக்கு தெரிவித்து அதற்காக பெரும் தொகையை லஞ்சமாக வாங்கியுள்ளனர்.

ஒரு பல்கலைக்கழகத்தின் விவரங்களை பகிர்வதற்காக 25 முதல் 30 லட்சம் வரை ஒருவர் லஞ்சம் பெற்றுள்ளார். இந்த மோசடி ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும்சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்களில் நடந்துள்ள நிலையில் போலி ஆசிரியர்கள், போலி பயோமெட்ரிக் மற்றும் போலி நோயாளிகளை காட்டுதல் போன்ற தந்திரங்களை பயன்படுத்தி உள்ளனர்.

இந்தூரில் செயல்படும் இன்டெக்ஸ் கல்வி நிறுவனம் போலி கைரேகை விரல்களை பதிவு செய்ய ரப்பர் கை உறைகளை பயன்படுத்தியுள்ளனர். இதில் ஒரு அதிகாரி பெற்ற லஞ்சம் பணம் ராஜஸ்தானில் 75 லட்சம் மதிப்பில் அனுமான் கோவில் கட்ட பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவக் கல்வி ஊழல் என்று கூறப்படும் நிலையில் 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.

மேலும் இந்த வழக்கில் மூன்று டாக்டர்கள், ஒரு கல்லூரி நிர்வாக இயக்குனர் உட்பட எட்டு பேரை சிபிஐ கைது செய்துள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணைகள் நடைபெறுகிறது.