நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக – அமமுக இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையானது தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து பாஜக – அமமுக இடையே பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தை என்பது நேரடியாக அல்லாமல் மறைமுகமாக நடைபெறுகிறது. அமமுக தங்கள் விருப்ப தொகுதிகளாக 21 தொகுதிகள் என்ற பட்டியலை பாஜகவிடம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 அணிகளாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, 3வதாக பாஜக தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைக்க அண்ணாமலை திட்டமிட்டு வருகிறார். அந்த வகையில் அதிமுகவில் இருந்து வந்துள்ள அமமுக 2019 தேர்தலை கூட சந்தித்தனர் என்ற அந்த அடிப்படையில் தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் தொடர்ந்து வாக்கு வங்கிகள் இருக்கக்கூடிய நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கணிசமான வாக்குகளை வாங்கி இருக்கிறது.

எனவே விருப்பமான தொகுதிகள் என 21 தொகுதிகளின் பட்டியலை கொடுத்துள்ளனர். 21 இடங்களில் நாங்கள் வலிமாக இருக்கிறோம். இந்த இடங்களில் நீங்கள் எங்கு சீட்டு கொடுத்தாலும் நாங்கள் நமது கூட்டணி சார்பில் வெற்றி பெறுவோம் என உறுதியாக அவர்கள் விருப்ப பட்டியலை கொடுத்துள்ளனர்.

2019 தேர்வு முடிவுகளின்படி திமுக கூட்டணி 52% வாக்குகளும், அதிமுக 30%, மூன்றாவது இடத்தில் 5.38% வாக்குகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  பெற்றிருந்தது. எனவே அந்த அடிப்படையில் தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வட மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், கொங்கு என அனைத்து பகுதிகளில் நாங்கள் நல்ல பலத்தோடு இருக்கிறோம். எனவே இந்த 21 தொகுதிகளில் எங்களுக்கு நீங்கள் தொகுதிகளை பிரித்து கொடுக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டணியை பொறுத்தவரை பிஜேபியுடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதேபோல ஓபிஎஸ் அணி செல்வது உறுதியாக இருக்க கூடிய நிலையில், மறைமுக பேச்சு வார்த்தை என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது.