
உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து அறிவித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட போவது கிடையாது என்றும் கூறினார்.
அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுவார்களா என்ற கேள்விக்கு தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் நிருபர்கள் இது பற்றி கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது,
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது ஒரு பெரிய கடல் போன்றது. நாங்கள் இன்னும் மோடியின் அணியில் தான் இருக்கிறோம். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம். ஒருங்கிணைந்த அதிமுக அமைய வாய்ப்பு கிடையாது. இன்னும் சிலருக்கு பறந்த மனது இல்லை.
திமுக ஆட்சி வேண்டாம் என்று நினைக்கக்கூடிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம். நாங்கள் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செல்கிறோம். மேலும் திமுகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.