2023 ஆசியக் கோப்பையில்இந்தியாவுக்கு எதிராக சூப்பர் ஃபோர்ஸ் போட்டியில் ஆடுவதற்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது அணியின் மீது நம்பிக்கை தெரிவித்தார்.

2023 ஆசிய கோப்பை குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிவடைந்த நிலையில், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 4க்குள் நுழைந்துள்ளன. இதையடுத்து நேற்று புதனன்று லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் ஃபோர்ஸ் கட்டத்தை வெற்றியுடன் பாபர் அசாம் படை தொடங்கியுள்ளது. ஆட்டத்திற்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இந்தியாவுக்கு எதிரான பெரிய ஆட்டத்திற்கு அணி தயாராக இருப்பதாகக் கூறினார்.

பங்களாதேஷுக்கு எதிரான வெற்றி, உயர் அழுத்த மோதலுக்குச் செல்லும் தங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தரும் என்று அவர் தெரிவித்துள்ளார். போட்டிக்கு பின் பாபர் அசாம் கூறியதாவது: “வெப்பம் அதிகம், ஆனால் முழு பெருமையும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான். முதலில் ஷாஹீன், பிறகு ஹாரிஸ் ரவுஃப். இங்குள்ள ஆடுகளங்களைப் பார்த்தோம், புல் இருந்தது, அதுவும் எங்களுக்குப் பிடிக்கும் என்பதால் ஃபஹீமைத் தேர்வு செய்யத் திட்டமிட்டோம். எப்போதும் இங்கு விளையாடும்போது, கூட்டம் எங்களை ஆதரிக்கிறது, அவர்கள் அனைவரும் இந்த போட்டியை ரசித்தார்கள் என்று நம்புகிறேன். (இந்தியாவுடன் விளையாடும்போது) இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கும், நாங்கள் எப்போதும் ஒரு பெரிய போட்டிக்கு தயாராக இருக்கிறோம். அடுத்த போட்டியில் நாங்கள் 100% கொடுப்போம்.” என்றார்.

வங்கதேசத்தை 193 ரன்களுக்கு சுருட்டியதால், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் மீண்டும் தங்கள் வெற்றியின் முக்கிய சிற்பிகளாக இருந்தனர். பந்துவீச்சாளர்களில் ஹரிஸ் ரவுஃப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.39.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எளிதாக துரத்தியது பாகிஸ்தான் அணி. தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக் 78 ரன்களிலும், கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் 63 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

2023 ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் குரூப்-ஸ்டேஜ் மோதல் மழையால் கைவிடப்பட்டது :

2023 ஆசியக் கோப்பையின் 3வது ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 2 ஆம் தேதி பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இருப்பினும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவின் டாப்-ஆர்டர்களை சரித்தனர்.

இந்தியா 66/4 என்ற நிலையில் தள்ளாடிக்கொண்டிருந்தபோது, ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் முறையே 87 மற்றும் 82 ரன்களை எடுத்து, தங்களது சிறப்பான ஆட்டத்தால் அணியை சரிவிலிருந்து மீட்டனர். பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்திய அணி 266 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் இன்னிங்சுக்குப் பிறகு மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. செப்டம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும்  சூப்பர் ஃபோர்ஸில் இரண்டு ஆசிய ஜாம்பவான்களும் மோத உள்ளனர்.