நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் சுருங்கிவிட்ட நிலையில், ஸ்மார்ட்போன் மற்றும் டேட்டிங் செயலிகளின் ஆதிக்கம் இந்தியக் குடும்ப அமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குறிப்பாக, திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிப்பதில் இந்தச் செயலிகள் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரியவந்துள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு ‘இன்டர்நெட்’, ‘சாட்டிங்’ போன்றவை புதிய சொற்களாக இருந்தன. இன்று மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் டேட்டிங் செயலிகளின் பயன்பாடு அசுர வேகத்தில் பரவியுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் இந்தச் செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். இதில் 65 சதவீதம் ஆண்களும், 35 சதவீதம் பெண்களும் உள்ளனர்.
இந்த ஆய்வில் வெளியாகியுள்ள மிக முக்கியமான தகவல், டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் 148 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதாகும். இவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பயனர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 1 மணி நேரம் முதல் 1.5 மணி நேரம் வரை இந்தச் செயலிகளில் செலவிடுகின்றனர்.
குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரையிலும் உரையாடல்கள் உச்சத்தை எட்டுகின்றன. ஆண்கள் 25 முதல் 30 வயதுடைய பெண்களையும், பெண்கள் 30 முதல் 40 வயதுடைய ஆண்களையும் அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாகப் பெண்கள், மருத்துவர்கள் மற்றும் ஆடிட்டர்கள் போன்ற பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையில் உள்ளவர்களையே அதிகம் தேர்ந்தெடுப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
டேட்டிங் செயலிகள் பயன்பாட்டில் இந்திய அளவில் உள்ள நகரங்களின் பட்டியல்:
-
பெங்களூரு – 18%
-
ஐதராபாத் – 17%
-
டெல்லி – 11%
-
மும்பை – 9%
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜூன் மாத தரவுகளின்படி, காஞ்சிபுரத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவீனத் தொடர்பு சாதனங்கள் உறவுகளை எளிதாக்கினாலும், அவை கலாசாரச் சீரழிவிற்கும் வழிவகுப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
