கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குஞ்சிபாளையத்தில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி(48) அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த இரண்டு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி மகாலட்சுமியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் மகாலட்சுமி நகையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

இதற்கிடையே பிரதீப் கூச்சலிட்ட படி  மர்ம நபர்களிடம் போராடியதாக தெரிகிறது. இந்நிலையில் மர்ம நபர்கள் இறுக்கமாக நகையை இழுத்ததால் அவர்களது கையில் 3 பவுன் நகை சிக்கியது. மீதமுள்ள 3 பவுன் நகை மகாலட்சுமி கையில் இருந்தது. பின்னர் ஆட்கள் வந்து விடுவார்கள் என அச்சத்தில் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். அப்போது ஒரு தோட்டத்தில் வசிக்கும் வள்ளியமாளின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது வள்ளியம்மாள் கூச்சலிட்டார்.

உடனே அங்கிருந்த சிலர் திரண்டு வந்து மர்ம நபர்களை விரட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஓடிய போது இரண்டு பேரும் தரைமட்ட கிணற்றில் விழுந்தனர். ஒருவர் மட்டும் அங்கிருந்து தப்பி சென்றார். மற்றொருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கம்பத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரமேஷை கைது செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.