சென்னை கே.கே.நகர் ராணி அண்ணாநகரைச் சேர்ந்தவர் அமித் பாஷா (31). இவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அடிக்கடி கொளத்தூர் 200 அடி சாலையில் உள்ள நண்பர் ஷேக் அப்துல்லா நடத்தும் டீக்கடைக்கு சென்று வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, ஷேக் அப்துல்லாவின் மனைவியைப் பற்றி அமித் பாஷா தவறான வார்த்தைகள் பேசினார் என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையில் கடுமையான தகராறு ஏற்பட்டது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, நேற்று முன்தினம் அமித் பாஷா அதே டீ கடைக்கு வந்தார். அப்போது, மனைவியை அவதூறாக பேசியதை வைத்து ஷேக் அப்துல்லா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் உச்சத்தை எட்டிய நிலையில், கடையில் இருந்த கத்தியை எடுத்து அமித் பாஷாவை குத்தினார்.

பின்னர், அங்கிருந்தவர்கள் காயமடைந்த அமித் பாஷாவை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அமித் பாஷாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஷேக் அப்துல்லா (31) என்பவரை கைது செய்தனர்.

பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். நண்பர்கள் இடையே ஏற்பட்ட  தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.