மும்பையில் இருந்து வரணாசிக்கு சென்றிருந்த இண்டிகோ விமான பயணத்தின் போது 89 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததையடுத்து மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் (சிகல்தானா) விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உத்திரப்பிரதேசம் மிர்சாபூரைச் சேர்ந்த சுஷிலா தேவி என்ற மூதாட்டி, மும்பையிலிருந்து விமானம் ஏறிய சில நிமிடங்களில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதனால் விமானம் சிகல்தானா விமான நிலையத்தில் இரவு 10 மணியளவில் அவசரமாக தரையிறங்கியது. அப்போது மருத்துவ குழு அவரை பரிசோதித்தபோது, மூதாட்டி ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, MIDC சிட்கோ போலீசார் தேவையான விசாரணைகளை மேற்கொண்டு, விமானம் தொடர்ந்து வரணாசி நோக்கி புறப்பட்டதாக தெரிவித்தனர். சுஷிலா தேவியின் உடல் சத்ரபதி சம்பாஜிநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.