உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்ற பெண், லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் தனது கையில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்ததாலேயே தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை உருவாக்கியுள்ளார். “பூங்னே வாலே குட்டா பர் ஷேர் அகேலா பாரி ஹை” என்ற பாடலுக்கு லிப் சின்க் செய்து, கையில் துப்பாக்கியை அசைத்து நின்றபடியே அவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அவர் சமூக ஊடகங்களில் புகழ்பெற முயற்சித்த ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோவின் பின்னணியில் அவர் தனது கணவருடன் காரில் பயணித்தபோது, காரை ஓரமாக நிறுத்தி, விரைவுச் சாலையில் நின்றபடி வீடியோ எடுத்துள்ளார். அதிவேக வாகனங்கள் செல்லும் அந்த இடத்தில், துப்பாக்கியை ஏந்தி கொண்டு நின்று ரீல் எடுக்கும்போது, அந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்திருந்தால், பெரிய விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்த வீடியோவில் அவர் மட்டுமின்றி, அவரது கணவரின் அலட்சியமும் தெளிவாக காணப்படுகிறது.

சமூக ஊடகங்களில் லைக்குகள், ஷேர் ஆகியவற்றிற்காக மக்கள் தங்களுடைய உயிரையே ஆபத்தில் இட்டுக்கொள்கின்ற நிலைமை மிகவும் கவலையைக் ஏற்படுத்துகிறது. தற்போது இந்த வீடியோவை பொறுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சமூக ஊடகத்தில் பரவும் புகழுக்காக இளைய தலைமுறையினர் சட்டத்தை மீறி செயற்படுவதை கட்டுப்படுத்த வேண்டிய நிலை வந்துள்ளது. இத்தகைய செயல்கள் மீதான கண்டனம் மட்டும் அல்லாமல், கடும் சட்ட நடவடிக்கைகளும் அவசியம் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.