தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கனக பிரசாத் (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலதிபர். இவர் நேற்று பால் வாங்குவதற்காக தன்னுடைய 2 வயது மகனை தூக்கிக்கொண்டு பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வேன் ஒன்று பைக்கின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட கனக பிரசாத் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். அவருடைய மகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினான். அப்போது அந்த சிறுவன் தன் தந்தையின் அருகே அமர்ந்து அவரை எழுப்பிய வாரே கதறி அழுதான்.

இந்த காட்சி அங்கிருந்தவர்கள் நெஞ்சை உலுக்கியது. இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கிடையில் பால் வாங்க சென்ற கணவன் மற்றும் குழந்தை வீடு திரும்பாததால் அவருடைய மனைவி அவர்களை தேடி வந்துள்ளார். அப்போது கணவர் நடு ரோட்டில் சடலமாக கிடந்ததை பார்த்து அவருடைய மனைவி கதறி அழுதார். மேலும் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.