
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு கோயம்புத்தூருக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்தப் பேருந்தை டிரைவர் கார்த்திகேயன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் சில பயணிகள் இறங்கிய நிலையில், 15 பயணிகளுடன் பேருந்து ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்தின் முன்பகுதி திடீரென தீ பிடித்து எரிந்தது. இதையறிந்த கார்த்திகேயன் பேருந்தை நிறுத்திவிட்டு உள்ளே இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வெளியேற்றினார். இதனால் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீயை அணைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.