மத்திய பிரதேசத்தின் பிண்ட் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், முகமூடி அணிந்தவர்கள்  கார் ஓட்டிச் சென்ற இளைஞரை வழிமறித்து தாக்க முயன்றனர். அதாவது இளைஞர் யுவராஜ் சிங் ராஜவத் குடும்பத்துடன் காரில் பிண்ட் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ராவத்புரா சானி மோட் அருகே ஒரு வாகனம் அவரை ஓவர்டேக் செய்து நிறுத்தியது. அதிலிருந்து முகமூடி அணிந்த 6 பேர் இறங்கி, அவரை காரில் இருந்து இழுத்து வெளியேற்றினர்.

அப்போது அந்த வழியாக வந்த லஹார் தொகுதி பாஜக எம்எல்ஏ அம்ப்ரீஷ் சர்மா, தன் டிரைவரிடம் வாகனத்தை நிறுத்த சொல்லி, துப்பாக்கியுடன் காரிலிருந்து இறங்கினார். துப்பாக்கியைக் கையில் எடுத்தபடி  அங்கிருந்தவர்களை துணிச்சலாக எதிர்த்தார். அவரை பார்த்தவுடன் தாக்குதலாளர்கள் பயந்து காரில் ஏறி தப்பிச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, எம்எல்ஏவின் தைரியமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய எம்எல்ஏ அம்ப்ரீஷ் சர்மா, “எப்போதும் என் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருப்பேன். என்னுடைய தொகுதியில் தற்போது குற்றங்கள் குறைந்து விட்டன. ஆனால் எல்லை பகுதியாக இருப்பதால், சில சிக்கல்கள் இருக்கக்கூடும்” என்றார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யுவராஜ் மீது அந்த கும்பல் ஏற்கனவே கடத்தல் முயற்சி செய்திருந்ததாகவும், பணம் வாங்கிய விவகாரத்தில் இது நடந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.