தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக அரசை தொடர்ந்து எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், திரைத்துறையில் இருந்து கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எந்த ஒரு குரலும் வராத நிலையில் நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்து விட்ட தமிழர்களுக்கு இடர் நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதாவது நடிகர் விஜயுடன் அதிமுக கட்சி கூட்டணி அமைக்க போகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜெயக்குமார் கூறியதாவது, நல்லது செய்தால் யாரை வேண்டுமானாலும் பாராட்டலாம். நான் மற்ற நடிகர்கள் நல்லது செய்தாலும் அவர்களை நிச்சயம் பாராட்டுவேன். நான் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் வேறு யாரும் குரல் கொடுக்கவில்லை என்றுதான் கூறினேன். மற்றபடி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கூட்டணி தொடர்பாக கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் கூட்டணிக்காக ஏங்கவில்லை. மேலும் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக நடிகர்கள் அமீர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இதுவரை பேசவில்லை என்று கூறியுள்ளார்.