முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனுன் சஞ்சு சாம்சனை பழம்பெரும் நட்சத்திரமும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்எஸ் தோனியுடன் ஒப்பிட்டுள்ளார்..

கடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்ற பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு ஹர்பஜன் சிங் கூறினார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது, “சஞ்சுவிடமிருந்து மற்றொரு நல்ல இன்னிங்ஸைக் கண்டோம். நான் முன்பே சொன்னேன், சஞ்சு இந்திய அணியில் தவறாமல் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை எப்படி சமாளிப்பது என்பது அவருக்குத் தெரியும். அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்குத் தெரியும். அவர் ஒரு வலுவான நட்சத்திரம். தோனியைப் போலவே அவர் தனது திறமையை நம்புகிறார்” என்று கூறினார்.

குஜராத்தின் சொந்த மண்ணில் ராஜஸ்தானின் வெற்றி அபாரமானது. குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தானுக்கு எதிராக கில் 45 ரன்களும், மில்லர் 46 ரன்களும் எடுத்த நிலையில் குஜராத் 177 ரன்களை குவித்தது. பின்னர் பேட்டிங்கில் முன்னணி வீரர்களை இழந்தாலும், பவர் பிளேயில் கணிசமான ரன்களை எடுக்க முடியாமல் போனாலும், சஞ்சுனாவின் கேப்டன்சியின் பலத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

சஞ்சுவின் 32 பந்தில் 60 மற்றும் ஹெட்மயர் 26 பந்துகளில் 56 ரன் விளாச ராஜஸ்தான் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 55 ரன்களில் இருந்து வெற்றி கண்டது. கடைசி கட்ட ஓவர்களில் 10 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த துருவ் ஜூரல் மற்றும் 3 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த அஸ்வினுக்கும் வெற்றியில் முக்கிய பங்கு உண்டு. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இன்று ராஜஸ்தான் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அவர்களின் சொந்த மைதானமான சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது..