
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்திவிராஜ் தற்போது மோகன்லால் வைத்து லூசிபர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் இந்த திரைப்படம் இந்து விரோத படமாக இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில்,
மலையாள நடிகர் மற்றும் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள ‘எம்புரான்’ திரைப்படம் குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வார இதழான ‘ஆர்கனைக்சர்’ கடும் விமர்சனங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்ட ஆர்கனைக்சர், இப்போது ‘எம்புரான்’ திரைப்படம் “இந்திய எதிரி மற்றும் இந்து விரோதப் பார்வையை” பரப்புவதாக குற்றஞ்சாட்டியுள்ளது. “இந்த திரைப்படம் இந்தியாவின் தேசிய ஒற்றுமை, பாரம்பரியம், அரசியல் அமைப்பு மற்றும் ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளது.

பிரித்விராஜ் இயக்கிய ‘லூசிபர்’ படத்தில் இந்திய அரசியல் கட்சிகள் வெளிநாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன என்ற எண்ணத்தை நுணுக்கமாகக் கையாளப்பட்டுள்ளதாகவும், அதன் தொடரான ‘எம்புரான்’ படத்தில் நாடு பாதுகாப்புக்காக உள்ள விசாரணை அமைப்புகள், காவல் துறை மற்றும் நீதித்துறையின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், நாடுகளில் நீதியும், நியாயமும் இல்லை என்ற எண்ணத்தை பொதுமக்களிடம் உருவாக்க முயற்சி செய்கிறார் என பிரித்விராஜ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், ‘எம்புரான்’ திரைப்படம் இஸ்லாமிய தீவிரவாதத்தை வெண்மை பூசும் வகையில் காட்சிப்படுத்தி, இந்துக்களை வில்லன்களாக காட்டுகிறது எனவும், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரங்களை சாய்வு கொண்ட கண்ணோட்டத்தில் எடுத்துரைக்கிறது என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது. 59 ராம பக்தர்கள் கொல்லப்பட்ட கோத்ரா சம்பவம் திரைப்படத்தில் மிகைப்படுத்தப்பட்டு நியாயமற்ற வகையில் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. “இந்தியாவின் ஜனநாயகத் தோழமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை பாதிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ஏற்க முடியாதது,” என ஆர்கனைக்சர் குறிப்பிட்டுள்ளது.
அதோடு இந்த படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்திற்கு அனுமனின் மற்றொரு பெயரான பஜ்ரங்கியின் பெயர் வைத்ததற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஆர்எஸ்எஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.