பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தூயசக்தியா அல்லது தூங்கும் சக்தியா? திமுக எனும் தீயசக்திக்கு மாற்றான தூயசக்தி நாங்கள் தான் என்று கூறிய திரு. ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற 13 நாட்களில் கொலை, பாலியல் குற்றம், கடத்தல், ரவுடியிசம், வன்முறை என கிட்டதட்ட 30- க்கும் அதிகமான குற்றங்கள் நடந்துள்ளதை தினசரி செய்தித்தாள்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
முந்தைய திமுக ஆட்சியில் தான் மக்கள் உயிர் பயத்துடன் ஒவ்வொரு நாளையும் கழித்தார்கள் என்று பார்த்தால், தற்போதைய தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு அந்தரத்தில் தான் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதுசரி, திருடன் கையில் சாவி கொடுத்ததைப் போல, குற்றவாளிகளை எல்லாம் அமைச்சர் பதவியில் அமர்த்தினால் குற்றங்கள் எப்படி குறையும்? அரசைக் கண்டு குற்றவாளிகளுக்கு எப்படி பயமிருக்கும்?
ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சரிசெய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டுவிட்டு, வித விதமான விளம்பரப் பரப்புரைகளிலேயே முதல்வர் கவனம் செலுத்திக் கொண்டிருப்பது அவரது அனுபவமற்ற ஆளுமையைத் தான் காட்டுகிறது. அலுவல் பணிகளுக்கு வேண்டுமானால் கொஞ்ச காலம் அவகாசம் கோரலாம் ஆனால் சட்டம் ஒழுங்கு போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு அவசரகதியில் துடிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை முதல்வர் எப்போதுதான் உணர்வார்? என்று பதிவிட்டுள்ளார்.
