
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் சவுரப் ராஜ்புத் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் லண்டனை தளமாகக் கொண்ட வணிக கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முஸ்கான் ஸ்தோகி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் சவுரப் லண்டனில் இருக்கும் நிலையில் அடிக்கடி இந்தியா வந்து தன்னுடைய மனைவி மற்றும் மகளை பார்த்துவிட்டு செல்வார். இந்நிலையில் தன்னுடைய மனைவி தகாத உறவில் இருப்பது சில நாட்களுக்கு முன்பாக சௌரப்புக்கு தெரிய வந்தது.
இதன் காரணமாக தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மகளை மட்டும் வளர்க்க முடிவு செய்தார். ஆனால் குடும்பத்தினர் விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மகளின் எதிர்காலத்தை நினைத்து அந்த முடிவை அவர் கைவிட்டார். அதோடு தன்னுடைய மனைவியையும் அவர் மன்னித்து ஏற்றுக் கொண்ட நிலையில் மீண்டும் லண்டன் சென்ற அவர் கடந்த மாதம் தன்னுடைய மனைவி மற்றும் மகளின் பிறந்த நாளுக்காக இந்தியா வந்தார். அப்போது அவர் தன்னுடைய மனைவி தொடர்ந்து அந்த வாலிபருடன் தகாத உறவில் இருப்பதை தெரிந்து கொண்டார்.
அவர்களுக்குள் நடந்த ஆபாசமான வாட்ஸ் அப் உரையாடல்களையும் அவர் பார்த்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் கோபத்தில் முஸ்கான் தன்னுடைய கணவனை காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த மார்ச் 4ஆம் தேதி சவுரப்பை கொன்ற இருவரும், அவரது உடலை துண்டித்து, சிமெண்ட்மூடிய ட்ரம்மில் பதுக்கி வைத்துள்ளனர். மார்ச் 18ஆம் தேதி முஸ்கானின் குடும்பத்தினர் அந்த ட்ரம்மை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், இருவரும் மார்ச் 19 அன்று கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலைக்குப் பிறகு முஸ்கான் காதலனுடன் சுற்றுலா சென்றதோடு அங்கு அவர்களின் பிறந்த நாளையும் கொண்டாடினார். தற்போது சிறையில் இருக்கும் முஸ்கான் ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களை கேட்பதோடு தன்னுடைய காதலனுடன் ஒரே ஜெயிலில் வைக்குமாறும் அட்டூழியம் செய்து வருகிறார். இந்த கொலை வழக்கில் அடுத்தடுத்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது குற்றவாளிகள் சடலத்தை மறைக்க ஒரு சூட் கேஸ் பயன்படுத்த முயன்றதாகவும், ஆனால் சடலம் அதில் பொருந்தாததால், அது ரத்தக்கறைகளால் களங்கமடைந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். குற்றவாளிகள் சடலத்தை சிமெண்டால் நிரப்பிய ட்ரம்மில் பதுக்கியதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட படுக்கைத் தலையணை மற்றும் குளியலறை டைல்ஸ்கள் உள்ளிட்ட இடங்களில் ரத்தக்கறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காவல் துறையினர் சம்பவ இடத்தில் இருந்து பல முக்கிய ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.
முன்னதாக மார்ச் 23 அன்று, சௌரபின் உடலுக்கு செய்யப்பட்ட போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட நிலையில் அறிக்கையில் அவர் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டதாகவும், இடது பக்கத்தில் மூன்று குத்துகள் இருந்ததாகவும், தலை மற்றும் இரு கைகளும் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. முதன்மை மரண காரணம் “haemorrhagic shock” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சௌரபின் கொலை வழக்கில் தற்போது 10-12 பேரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதுடன், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.