இந்தோனேசியாவைச் சேர்ந்த டிக் டாக்கர் ஒருவர் துவைக்கப்படாத, பயன்படுத்திய ஆடைகளை அணிந்ததற்குப் பிறகு molluscum contagiosum என்ற அரிய தோல் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. @onenevertwhoo_one என்ற முகவரியில் பதிவிடும் அந்த டிக் டாக்கர், துணிகள் மற்றும் ஆடைகள் வழியாக வந்த கிருமிகளால் தான் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அவரது முகம் மற்றும் கழுத்தில் புடைப்புகள் மெல்லிய குழாய்கள் போல உருவாகியுள்ளன.

இத்தொற்று பாக்ஸ் வைரஸால் ஏற்படுகிறது. அதாவது பாதிக்கப்பட்ட ஒருவரின் துணி, படுக்கை, ஆடை போன்றவற்றைப் பயன்படுத்தினால் அது மற்றவர்களுக்கும் பரவும். நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் இந்த தொற்றுக்கு எளிதில் ஆளாகலாம் என்றும், சிகிச்சையின்றி இதன் தாக்கம் இரண்டாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கையின்படி, பயன்படுத்திய ஆடைகளை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சோப்போடு சலவையிட வேண்டும். பொதுப் பயன்பாட்டில் உள்ள பழைய துணிகளை வாங்கும்போது, அவற்றை தூய்மை செய்யாமல் உடனடியாக அணிவது ஆபத்தாக இருக்கலாம். மேலும் சிக்கன ஃபேஷன் மகிழ்ச்சியை தரலாம், ஆனால் சுகாதார விழிப்புணர்வும் அவசியம் என்பதை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.