
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊரணிபுரம் பட்டு வீதி கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று திருமண நாளை முன்னிட்டு தங்கமணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலை முதல் மூன்று மணி நேரம் அப்பகுதியில் கனமழை பெய்தது.
அதன் பிறகு வெயில் அடித்ததால் தங்கமணி துவைத்த துணிகளை காய போடுவதற்காக ஒரு சிறிய கம்பியை வீட்டில் இருக்கும் இரும்பு கம்பியில் கட்டி உள்ளார். அதில் துணிகளை காய போட்டுள்ளார். அதன் பிறகு காய்ந்த துணிகளை எடுக்க சென்றபோது வீட்டில் இருந்து இரும்பு கம்பி வழியாக கொடி கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அதனை அறியாத தங்கமணி கம்பியை தொட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த தங்கமணியின் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்த நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தங்கமணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தங்கமணிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகவும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.