ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த லட்சுமி சாய் சந்தோஷ் என்பவருக்கும் ஹைதராபாத் சேர்ந்த பார்கவ் என்பவருக்கும் கடந்த 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதுமண தம்பதி தங்கள் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளனர்.

அப்போது வரிசையில் கூட்ட நெரிசலில் இந்த தம்பதியும் சென்றுள்ளனர். இந்நிலையில் கோவிலுக்குள் சென்று ஏழுமலையான தரிசித்து விட்டு தங்க மண்டபம் அருகே வந்தபோது புதுமணப்பெண் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடு்த்து குடும்பத்தினர் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் புதுமணப்பன் லட்சுமி சாய் சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து லட்சுமியின் பெற்றோர் கூறுகையில், சிறு வயது முதலே அவருக்கு சுவாசக் கோளாறு இருந்ததால் கூட்ட நெரிசல் காரணமாக மயங்கி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து புதுமண பெண்ணின் சடலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.