
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஒரு பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா (21) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தினேஷ் என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். திருமணத்திற்கு பிறகு நித்யா தன்னுடைய காதல் கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தனி குடித்தனம் செல்வது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று நேற்று முன்தினம் இரவும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அவர்களை நித்யாவின் சகோதரர் வந்து சமாதானம் செய்து வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் தூங்குவதற்காக சென்ற நிலையில் மறுநாள் காலை தினேஷ் விழித்து பார்த்தபோது அவருடைய மனைவி தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அவர் மிகவும் அதிர்ச்சியடைந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி தாரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதன்பின் நித்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.